செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (13:56 IST)

கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்: WHO எச்சரிக்கை

கொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் பிபிசியிடம் கூறினார்.

முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று கூறினார் க்ளூக்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது, மேலும் பல நாடுகளிலும் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை சமிக்ஞை வந்துள்ளது.

குளிர் காலம், போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாதது, ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவின் டெல்டா திரிபு பரவுவது என பல்வேறு காரணிகள் இந்த மாபெரும் பரவலுக்குப் பின் இருப்பதாக டாக்டர் க்ளூக் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பது, அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது, புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை செயல்படுத்துவது போன்றவை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது" என பிபிசியிடம் கூறினார். "வைரஸ் பரவலை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என நமக்குத் தெரியும் எனவும் கூறினார்.

கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் சொல்வதை கடைசி வாய்ப்பாகக் கருத வேண்டும் என கூறினார் க்ளூக். ஆனால் இப்போது அது தொடர்பாக சட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் விவாதங்கள் நடத்தப்படுவது சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

"அதற்கு முன் கொரோனா பாஸ் போன்ற வழிகளும் உள்ளன" என்றார். "இது சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு அல்ல, மாறாக தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான ஒரு சாதனம்" என்றார் அவர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு சட்ட ரீதியிலான தேவை என ஐரோப்பிய பிராந்தியத்தில் முதல் நாடாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது ஆஸ்த்திரியா. இந்த புதிய அறிவிப்பு வரும் 2022 பிப்ரவரி முதல் அமலுக்கு வரும், ஆனால் இதை எப்படி செயல்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் புதிய உச்சத்தை தொட்டிருப்பதையும், குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருப்பதையும் சமாளிக்க ஆஸ்த்திரியாவில் புதிய தேசிய அளவிலான ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.

ஒரு சுதந்திரமான சமூகத்தில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் மிகவும் கடினமானது, ஆனால் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா சுழலிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி என்றார் ஆஸ்த்திரிய நாட்டின் ஆட்சித் தலைவர் அலெக்ஸாண்டர் ஸ்கலென்பெர்க்.

"இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பிரச்சனை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இடம் கிடைக்காது. எனவே அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்" என அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து, தலைநகர் வியன்னாவில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் போராட்டக்காரர்கள் 'தடுப்பூசி வேண்டாம்' "இதுவரை நடந்தது எல்லாம் போதும்' போன்ற பதாகைகளை ஏந்தினர்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

நெதர்லாந்தில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து, ரோட்டர்டாமில் கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அரசின் கட்டுப்பாடுகள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஜெர்மனியில் மீண்டும் தேசிய அளவில் ஓர் ஊரடங்கு அறிவிக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது என அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பிரிட்டனில் 44,242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மீண்டும் ஒரு புதிய ஊரடங்கை கொண்டு வரும் திட்டம் இல்லை என தொடர்ந்து கூறி வந்தது அரசு. ஆனால் தேசிய பொது சுகாதார சேவையைப் பாதுகாக்க, பிளான் பி என்கிற பெயரில் கூடுதலாக சில கொரோனா விதிமுறைகளைக் கொண்டு வரலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

சில உள்ளரங்கு இடங்களுக்கு கொரோனா பாஸ்போர்ட்டை கட்டாயமாக்குவது, உள்ளரங்குகளில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்த படியே வேலை செய்ய ஊக்குவிப்பது போன்றவை இந்த பிளான் பி திட்டத்தில் அடங்கும்.