இந்திய மக்களவை தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு - தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசத்தில் என்ன நிலைமை?

india
Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:32 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்துவருகிறது. பனிரெண்டு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் உள்ளிட்டவற்றில் இருந்து 95 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.
அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர்,கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஷா, புதுச்சேரி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவற்றில் தேர்தல் நடைபெறுகிறது.
 
கர்நாடகா
 
மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 17 இடங்களையும் காங்கிரஸ் 9 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் இரண்டு இடங்களையும் வென்றது.
 
காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தற்போது கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. பாஜகவுக்கு இங்கு 17 இடங்களையும் தக்கவைப்பது பிரதான சவால்.
 
நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தான் படித்த பள்ளியிலேயே தனது வாக்கைச் செலுத்தியிருக்கிறார்.
 
''நான் எனது பள்ளியில் 41 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேனோ அதே இடத்தில் இன்று எனது வாக்கைச் செலுத்தினேன். மறக்க முடியாத நினைவுகளும், புதுப்பயணமும்'' என பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
 
 
உத்தரபிரதேசம்
 
உத்தரபிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இரண்டாவது கட்ட வாக்குப் பதிவில் எட்டு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
 
இதில் மதுரா தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
பிஹார்
 
பிஹாரில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில் இரண்டாவது கட்ட தேர்தலில் நான்கு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
இதில் கிஷான்ஜங் தொகுதியில் சுமார் 67 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இந்த தொகுதியில் ஒவைசி கட்சியின் வேட்பாளர் காங்கிரசுக்கு கடும் போட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒவைசி கட்சி இங்கே வென்றால் ஐதராபாத்துக்கு வெளியே அக்கட்சி வெல்லும் முதல் மக்களவை தொகுதியாக கிஷான்ஜங் அமையும்.
 
இந்த நான்கு தொகுதிகளிலும் காலை 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.62% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
 
ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அசாமிலும் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் ஐந்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 26.39% வாக்குப்பதிவு நடந்தது.
 
சத்தீஸ்கர்
 
சத்தீஸ்கரில் மொத்தம் 11 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் ராஜ்நான்ட்கான், மஹாசமுந்த், கான்கெர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
 
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக 11 இடங்களில் 10-ல் வென்றது. சத்தீஸ்கரில் காலை 11 மணி நிலவரப்படி 30.47% வாக்குகள் பதிவாகின.
 
மஹாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் 10-ல் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 35.4% வாக்குகள் இப்பகுதிகளில் பதிவாகியுள்ளது.
 
மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் டார்ஜிலிங் உள்பட மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு & காஷ்மீரில் இரண்டு தொகுதிகள், மணிப்பூரில் ஒரு தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
மணிப்பூரில் தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதியில் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி 49.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
தமிழகம்
 
தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
மதியம் ஒரு மணி வரை தமிழகத்தில் தேர்தல் நடக்கும் 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்குகளும் 39.49%, இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 42.92% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :