செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 26 மே 2021 (00:10 IST)

ஐபிஎல் 2021: மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம்?

இதுதொடர்பாக ஏ.என்.ஐ. முகமையிடம் பேசிய பிசிசிஐ-க்கு நெருக்கமான வட்டாரத்தினர், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மீதமுள்ள 31 போட்டிகளை 25 நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
"தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்தையும் திட்டமிட வேண்டியுள்ளது. எனவே, இப்போதைக்கு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15க்குள் இந்த ஆண்டு தொடரை நடத்தி முடிக்க திட்டமிட்டு வருகிறோம். அதாவது, 25 நாட்களில் தொடரை முடிக்க ஆலோசித்து வருகிறோம்."
 
இதுகுறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, மே 29 அன்று நடைபெறும் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிக்கப்படும் என தெரிவித்தனர். "இது ஒரு தற்காலிக திட்டம். இதுகுறித்து சனிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்தின்போது விவாதிக்கப்படும்."
 
விளம்பரம்
 
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில், இந்த திட்டம் எப்படி சாத்தியமாகும் என்று கேட்டபோது, "இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14இல் முடிகிறது. இதை முதலாக கொண்டு, ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய வட்டத்துக்குள் இருக்கும் வீரர்களை அப்படியே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்துவதற்கான காலகட்டத்தை குறைக்க முடியுமென்று கருதுகிறோம்" என்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. முகமை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம் - பிசிசிஐ திடீர் அறிவிப்பு
கொரோனா இரண்டாம் அலை: ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள் சொல்வது என்ன?
 
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த 14ஆவது ஐபிஎல் தொடர், பல அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுவதாக மே 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக அப்போது ஏ.என்.ஐ. முகமையிடம் பேசிய பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா, "பிசிசிஐ மற்றும் ஐபிஎல் இணைந்து 2021ஆம் ஆண்டுக்கான தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஐபிஎல் தொடருடன் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.
 
 
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்.29 போட்டிகள் வரை விளையாடப்பட்ட இந்த போட்டியில் 8-ல் 6 போட்டிகளில் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7-ல் 5 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்திலும், 7-ல் 5 போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
 
30-வது போட்டியாக, மே 03-ம் தேதி திங்கட்கிழமை, அஹ்மதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் நடக்க வேண்டிய போட்டி நடைபெறவில்லை.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.
 
அதனைத் தொடர்ந்து போட்டியை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதங்கள் எழுந்து, பிறகு தொடர் ஒத்திவைக்கப்படுவதாக மே 4ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.