செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (19:48 IST)

ஆதார் அடையாள அட்டை: குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? உண்மை என்ன?

தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் பேசிய சத்தார் கான், தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், தனது தந்தை மத்திய அரசால் நடத்தப்படும் ஆல்வின் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், தற்போது தனது தாய் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த நோட்டீஸை தான் பெற்றதாக தெரிவித்த அவர், அதன் விவரங்கள் புரியாததால் அது குறித்து அறிய உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை அணுகியுள்ளார்.

ஆதார் ஒழுங்குமுறைகள் சட்டம் 2016-ன் பிரிவு 6 மற்றும் சட்டவிதி 30-இன்படி இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

''நீங்கள் இந்திய குடிமகன் இல்லை எனவும், போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நீங்கள் ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ளீர்கள் என எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புகார்/குற்றச்சாட்டு வந்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ( யு.ஐ.டி.ஏ.ஐ) ஹைதராபாத் அலுவலகம் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது'' என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாலாபூர் பகுதியில் உள்ள மெகா கார்ட்டன்ஸ் வளாகத்தில் பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதியன்று விசாரணை ஆணையத்துக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமையை நிரூபிக்க தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் அவர் இந்த விசாரணை ஆணைய சந்திப்புக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவர் இந்த விசாரணை ஆணைய கூட்டத்துக்கு வரவில்லையென்றாலேயோ அல்லது தனது குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்கவில்லையென்றாலோ, ஆதார் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர், அந்த குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிக்க தவறிவிட்டதாக கருதி ஆதார் சட்டப்பிரிவு 29-ன்படி அவரது ஆதார் அடையாள அட்டை ரத்து செய்யப்படும்.

ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கிவரும் மஜ்லிஸ் மச்சாவோ டெஹ்ரிக் என்ற அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளரான அம்ஜத் உல்லா கான் இது குறித்து கூறுகையில், சத்தார் கானின் ஆவணங்களை தான் ஆராய்ந்து பார்த்ததாகவும், அவை அனைத்தும் சரியானவை என்று கண்டறிந்ததாகவும் கூறினார்.

இந்த நோட்டீஸ் குறித்து சத்தார் கானின் வழக்கறிஞரான முஸாஃபருல்லா கான் கூறுகையில், இந்திய குடியுரிமை தொடர்பான ஆதார சான்றிதழ்களில் ஆதார் அடையாள அட்டை இடம்பெறவில்லை. இந்நிலையில் தவறான தகவல்கள் அளித்து ஆதார் அடையாள அட்டை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை அவர் இந்திய குடிமகன் இல்லை என்று அறிவிக்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக தாங்கள் தொடர்ந்து போராட போவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லத் தயராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள வினாக்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ ட்விட்டர் வலைதளத்தில் பதிலளித்துள்ளது.

''தெலங்கானா மாநில போலீசாருக்கு, சட்டவிரோதமாக நாட்டில் சிலர் வசித்துவருவதாக கிடைத்த தகவல்களின்படி தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ள சிலருக்கு யு.ஐ.டி.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சில செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன''
''இது குறித்து வெளியான செய்திகள் சரியான பார்வையில் வெளியிடப்படவில்லை என்று யு.ஐ.டி.ஏ.ஐ தெளிவுபடுத்துகிறது. நேரடியாக குடியுரிமை விவகாரத்தில் ஆதார் செய்வதற்கு ஒன்றுமில்லை''
''ஆதார் இந்திய குடியுரிமை தொடர்பான ஆவணம் அல்ல. அதேவேளையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கக்கூடாது என்ற முக்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது'' என்று டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''தெலங்கானா மாநில போலீசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் 127 பேர் தவறான தகவல்கள் அளித்து ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளதாகவும், அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கிடைத்த தகவல்களின்படி ஹைதராபாத் பிராந்திய அலுவலகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது''

''இவர்கள் மீதான ஆதார் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை ஆதார் சட்டத்தின்படி ரத்து செய்யப்படும்''

''அதனால் தங்களின் ஆதார் அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களுடன் இது தொடர்பான விசாரணை ஆணையத்தில் இவர்கள் ஆஜராக வேண்டும் என ஹைதராபாத் பிராந்திய அலுவலகம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது'' என்று மேலும் விளக்கியுள்ளது.

எங்களின் சேவையின் தரத்தை மேலும் உயர்த்த நாங்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைதான் இது என்று கூறியுள்ள யு.ஐ.டி.ஏ.ஐ, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 127 பேருக்கும் இது தொடர்பான ஆவணங்களை சேகரிக்க நேரம் தேவை என்பதால் இவர்கள் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதை மே மாதத்துக்கு மாற்றியுள்ளோம் என்று மேலும் கூறியுள்ளது.

இது குறித்து பிபிசி செய்தியாளர் தீப்தியிடம் ஹைதராபாத் ஆதார் பிராந்திய அலுவலகத்தின் துணை பொது மேலாளரான ஆர். எஸ். கோபாலன் கூறுகையில், ''தெலங்கானா மாநில போலீஸ் அளித்த அறிக்கையின்படி வழங்கப்பட்ட இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணையை நாளையே (பிப்ரவரி 20) நடத்துவதற்கு நேரம் குறைவு என்பதால், வேறு தேதிக்கு மாற்றவுள்ளோம் '' என்று தெரிவித்தார்.

தங்களின் குடியுரிமையை நிரூபிக்க கூறி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டதாக வந்த செய்திகள் பற்றி கேட்டதற்கு, பதிலளித்த அவர், ''இது குறித்து நாங்கள் ஆராய்வோம். ஆதார் சட்டப்பிரிவை தாண்டி நோட்டீஸில் வார்த்தைகள் இடம் பெற்று இருந்தால் நாங்கள் அதில் மாற்றம் செய்வோம். இதுவரை இது போன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டபோது எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பிரச்சனை தற்போது இது விவாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கூறியபடி, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அதிகாரம் யு.ஐ.டி.ஏ.ஐ-க்கு இல்லை'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.