திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (18:54 IST)

நித்தியானந்தாவை உடனே பிடியுங்கள்; ஆர்டர் போட்ட ராம்நகர் கோர்ட்

நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கர்நாடகாவின் ராம் நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் காணாமல் போன வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு ஆகியவை நித்தியானந்தா மீது பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். அவரை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் அகமதாபாத் போலீஸாரின் வேண்டுகோளின் படி இண்டர்போல் நித்தியனந்தா மீது ப்ளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தது.

இதனிடையே முன்னதாக பெங்களூர் அருகே பிடதி ஆசிரமத்தில் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டார் நித்தியானந்தா. இது தொடர்பாக ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், பெங்களூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.  எனினும் ராம் நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பல உத்தரவு பிறப்பித்தும் நித்தியானந்தா ஆஜராகவில்லை.

இதனை தொடர்ந்து நித்தியாந்தாவிற்கு ஜாமீனை ரத்து செய்தது பெங்களூர் நீதிமன்றம். இந்நிலையில் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ராம் நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பிடிவாரண்டும் வழங்கியுள்ளது.