ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ஆண்டு ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (15:06 IST)

2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி

கன்னி: புதனை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே - கிரகநிலை: குருபகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - ராகு லாப  ஸ்தானத்திலும் - சனி பகவான் சுக ஸ்தானத்திலும் - கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 
கிரகமாற்றம்: 13.02.2019 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும் - கேது பகவான் சுக ஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.
 
23.11.2019 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
இந்த ஆண்டு அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன்  பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத்  தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிறர்  கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை  அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும்  ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன்  செயல்களைச் செய்வீர்கள்.
 
குடும்பம்: குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து  வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துக்களை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட  குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்கு  தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களின் மனதை அரித்துக்கொண்டிருந்த விவகாரத்தில் நல்ல முடிவு  ஏற்படும். உங்களின் ஞாபக சக்தியால் முக்கியமான தருணங்களில் சமயோஜிதமாகப் பேசி குடும்பத்தினரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
 
பொருளாதாரம்: பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.
 
ஆரோக்கியம்: உடல் நிலையில் நல்ல மாற்றம் இருக்கும். சோம்பேறித்தனம் அகன்று சுறுசுறுப்பாக வேலைகளைப் பார்ப்பீர்கள்.
 
உத்தியோகஸ்தர்கள்: உத்யோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். அலுவலகம் தொடர்பான உங்களின் புதிய எண்ணங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சக  ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும்,  நல்லெண்ணங்களுக்கும் பாத்திரமாவீர்கள். அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி  சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.  செயல்பாடுகளில் தனித்த திறமையும்  நண்பர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மிகுந்த வெற்றி தரும். உத்தியோகத்தில் திருப்தியும் நற்பெயரும்  உண்டாகும். சிலர் மேலிடத்தின் நிர்பந்தம் காரணமாக வெளிநாடு செல்வார்கள்.
 
வியாபாரிகள்: வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி  அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும்.  கூட்டாளிகள் உங்கள் பொறுப்புகளில் பங்கெடுத்துக்கொண்டு வேலைகளைக் குறைப்பார்கள்.
 
பெண்மணிகள்: பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை,  ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு  குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
 
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும்.  வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொது பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து  கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம்  குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்க்கவும்.
 
கலைத்துறையினர்: கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய  ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
 
மாணவமணிகள்: மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே அவர்களின் பழைய தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். குருகுலக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் குருவை  போற்றி நடந்து அவர்தரும் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல்  தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர். யோகாசனப்  பயிற்சியை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயர் பெறுவார்கள். 
 
உத்திரம் - 2, 3, 4: இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.  பதவி உயர்வு கிடைக்கலாம்.  குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி  அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.  உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.
 
ஹஸ்தம்: இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும்  உங்கள் கௌரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழிகிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில்  நடைபெறும்.
 
சித்திரை - 1, 2: இந்த ஆண்டு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால்  திடீரென்று வரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான  விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். 
 
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் ஐயப்பனுக்கு அரளிமாலை சாற்றவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் - "ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:".
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5.