செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2021 கண்ணோட்டம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:42 IST)

2021 கண்ணோட்டம்: தமிழகம் மறக்க முடியாத 10 !!!

2021 ஆம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் தமிழக அளவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளின் டாப் 10 நிகழ்வுகளை வழங்குகிறோம்..


1. சசிகலா விடுதலையும் விலகலும்... 
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்துக்கொண்டு ஜனவரி 28 ஆம் தேதி விடுதலை ஆனார். சசிகலா விடுதலை ஆனதும் அதிஉகவை தனது கட்டுப்பாட்டிற்கும் கொண்டு வருவார் என பெரிய எதிர்ப்பார்ப்புகள் இர்ந்த நிலையில் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிருப்தி ஏற்படுத்தினார். 
 
2. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... 
 
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் 13வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற்றது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஏறத்தாழ 52 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு பிறகு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதை கண்ட அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். 
 
3. குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 
 
நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் ராணுவத்தால் சீல் வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
4. தமிழக சட்டசபை தேர்தல்: தோல்வியிலும் கமல் சாதனை
 
தமிழக சட்டசபை தேர்தலில் கடும் இழுபறிக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார். மிக சொற்ப அளவிலான வாக்குகளில் கமல்ஹாசன் தோல்வியை தழுவினார். இதில் ஆறுதல் பெறக் கூடிய விஷயங்கள் என்னவெனில் கமல்ஹாசன் சாதாரணமாக தோற்றுவிடவில்லை. கடுமையான டஃப் கொடுத்தே தோற்றுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டும் என தமிழகமே பிராத்தனை செய்து இருக்கும். கமல்ஹாசன் மட்டும் வென்றிருந்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தது என்ற பெருமையை பெற்றிருக்கும்.
 
5. சென்னையை புரட்டி போட்ட மழை
 
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை காரணமாக கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியது. இதனால், சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையும் வெள்ளமும் 2015 ஆம் நிகழ்வை கண்முன் நிறுத்திவிட்டு சென்றது. 
 
6. அக்னி கலச காலண்டர்... சர்ச்சையான ஜெய்பீம்
 
அக்னி கலச காலண்டரை ஜெய்பீம் படத்தில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் நடிகர் சூர்யா மீது புகாரையும் கொடுத்தனர். எனினும் அக்னி கலச காலண்டரை நாங்கள் வேண்டுமென்றே வைக்கவில்லை. அது வன்னியர் சங்கத்தின் அடையாளம் என்பதும் எனக்கு தெரியாது. இதில் சூர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய இயக்குநர் ஞானவேல்ராஜா தான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார். 
 
7. தமிழகத்திலும் ஒமைக்ரான்...
 
உலகை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரான் கரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் வேகமாக அதிகரித்துவருகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. தற்போதுவரை நாட்டில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடி திரும்பிய நிலையில் 15 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 
8. ரவுண்ட் கட்டும் ரெய்ட்...
 
முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு உள்ளாகும் ஐந்தாவது அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
9. வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு...
 
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு அளித்தது. ஆனால், வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. `இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன வன்னியர் அமைப்புகள். 
 
10. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள்...
 
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ்ல் இந்தியா சாதனைகளை படைத்தது. இதில் தமிழக வீரர்கள் மிக்கிய பங்கு வகித்தனர். ஜூலை மாதம் 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகளும், பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெற்றன.