வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2015 (10:26 IST)

தமிழகம் - 2015: சேஷசமுத்திரம் கலவரம்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி தலித் மக்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் கலவரம் ஏற்பட்டது.


 

 
ஆகஸ்ட்டு 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதே வேளையில், துயரமானதும், கொடூரமானதுமான ஒரு சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்தேறியது.
 
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி மக்களின் மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலமும், தேரோட்டமும், பொதுப்பாதை வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு, 7 மணியளவில் தலித் பகுதி மக்கள் குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
 
மேலும், பெட்ரோல் குண்டுகள் மூலம் சாமி தேரும், குடியிருப்புகளும் கொளுத்தப்பட்டுள்ளன. பல வீடுகள், தெருவிளக்குகள், குடிநீர்குழாய்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. வைக்கோல் போர்களையும் முற்றிலும் எரிக்கப்பட்டன.
 
தலித் மக்களின் குடிசைகளை முற்றிலும் எரித்து நாசமானது. இதைத் தடுக்க வந்த காவல்துறையினர் மீதும் கற்களை வீசப்பட்டன.  இதைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
 
அதே நாளில் பாமகவின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில்  நடைபெற்றது. சேஷசமுத்திரம் கிராமத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வந்து சென்றவர்கள்தான் தலித் மக்களின் கோவில் தேர் மீது பெட்ரோல் குண்டுகள் எறிந்து எரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
 இந்நிலையில், கோவில் தேர் மற்றும் குடிசைகள் எரிப்பையும், காவலர்களின் மீதான தாக்குதல்களையும் பாமக தலைவர் ராமதாஸ் நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கையில், "வன்முறைக் கட்சியை சேர்ந்த சிலர் இன்று தேரோட்டம் நடத்தியே தீருவோம் என சுவரொட்டிகளை ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்விளைவாக நேற்றிரவு 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த தேர்திருவிழா நடைபெறுவதாக இருந்த ஒருவார காலத்திற்கு முன்னர் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அனைத்து தரப்பினரும், 16 ஆம் தேதி தேர்த்திருவிழா நடத்திக்கொள்ள ஏற்றுக் கொண்டனர்.
 
எனவே, மாவட்ட ஆட்சியர் பேசி சுமூகமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி, அனைவரும் சமாதானம் அடைந்த பின்னரும், தலித் மக்கள் மீது பாமகவினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தலித் அமைப்பினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டமும் நடத்தினர்.