2015 -இன் டாப் 10 தோல்விப் படங்கள்


ஜே.பி.ஆர்.| Last Updated: செவ்வாய், 29 டிசம்பர் 2015 (13:12 IST)
வெற்றிப் படங்களை வரிசைப்படுத்ததான் கஷ்டம். தோல்விப் படங்கள் மானாவாரியாக உள்ளன. டாப் 100 பட்டியல் தயாரித்தாலும் எளிதாக அடுக்கிவிடலாம் அத்தனையையும். என்றாலும், ஸ்டார் பவர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை தயாரித்திருக்கிறோம்.

 
 
10. இஞ்சி இடுப்பழகி
 
அனுஷ்கா 20 கிலோ எடையை அதிகரித்திருக்கிறார் என்ற ஒற்றை விளம்பரத்தில் வெளியான படம். அனுஷ்கா என்பதால் எதிர்பார்ப்பும் எக்கச்சக்கம். அனுபவத்தெளிவு இல்லாத திரைக்கதையும் காட்சிகளும் படத்தை குப்புற தள்ளியது என்றால், அடாது பெய்த மழை குழி பறித்தது. பிவிபி சினிமாவுக்கு இடுப்பழகியால் கிட்டத்தட்ட 90 சதவீதம் நஷ்டம் என்கிறார்கள்.
 
9 a. வலியவன்
 
எங்கேயும் எப்போதும் படத்தை தந்தவர்களின் படம் என்பதால் சின்னதாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சந்தைக்கடை காட்சியிலும் 'ரிச் கேர்ள்ஸ்'தான் வேண்டும் என்று இயக்குனர் சரவணன் அடம்பிடித்து படத்தின் பட்ஜெட்டை எகிற வைத்தார். ஜெய்யை ஆக்ஷன் ஹீரோவாக காட்ட நினைத்து பெரிதாக பல்பு வாங்கிக் கொண்டது படம். தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காகக்கூட இந்தப் படத்தை யாரும் சீண்டவில்லை.
 
9 b. யட்சன்
 
யட்சன் இல்லாவிடில் இந்தப் பட்டியல் முழுமை பெறாது. ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய யட்சன் இந்த வருடத்தின் முக்கியமான வாஷ் அவுட் திரைப்படம். ஆர்யா போன்ற ஒரு ஹீரோவின் படம், விஷ்ணுவர்தன் போன்ற பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் காலைப் பனிபோல் ஆவியாகிறது என்றால் யட்சன் எப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும்? அட்டர் பிளாப்புக்கான சகல மணமும் குணமும் நிறைந்த படத்துக்கு யட்சன் சரியான உதாரணம்.
 
8. சகலகலாவல்லவன்
 
மோசமான படங்களின் பட்டியலை தயாரித்தால் யோசிக்காமல் இந்தப் படத்துக்கு முதலிடம் தரலாம். இயக்குனர் சுராஜின் அரதமொக்கை படம் இது. அலெக்ஸ் பாண்டியன் என்ற குப்பையை தந்தவருக்கு மீண்டும் ஒரு பட வாய்ப்பை - அதுவும் சினிமாவில் அனுபவமிக்க லட்சுமி மூவி மேக்கர்ஸ் எப்படி தந்தது? வேஸ்ட் ஆஃப் தி இயர்.
 
7. வை ராஜா வை
ஐஸ்வர்யா இயக்கிய படம் கதைவிவாதத்தின் போது கம்மியான பட்ஜெட்டாகவே இருந்தது. அதனை ஹைடெக் கப்பலுக்கு மாற்றி கோடிகளை செலவளிக்க வைத்தார். கமல் படம் வெளியாகாததால் முதல் நாளில் நல்ல வசூல். இரண்டாவது நாளே வசூல் பாதாளத்துக்கு சென்று தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்டை, இனி படமே தயாரிக்கக் கூடாதுய்யா என்று பம்ம வைத்தது.  
 
6. எலி
 
தன்னைத்தானே கிண்டலடித்துக் கொள்வதே வடிவேலின் பலம். அந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் படம் எடுக்கிறேன் என்று நாடகத்தை எடுத்தால் வடிவேலே நடித்தாலும் நமத்துத்தான் போகும். நமக்கு 30 கோடி பிசினஸ் இருக்கு என்று நண்பரை படம் தயாரிக்க வைத்து பதினாறு கோடிகளில் பட்டை நாமத்தை சார்த்திய படம். பெயர் எலி என்றாலும் ஏற்படுத்திய சேதம் பல யானைகள் வரும்.
 
5. மாசு என்கிற மாசில்லாமணி
 
ஹாலிவுட் படத்தை காப்பியடித்ததும் இல்லாமல் ரசிகர்களை சோதிக்கவும் செய்தது மாசு. கமர்ஷியல் படத்தில் நடித்தால்தான் மாஸ் ஹீரோவாக நிலைத்திருக்க முடியும் என்ற சிவகுமார் மைந்தர்களுக்கு விழுந்த மரண அடிகளில் இதுவும் ஒன்று. கிராபிக்ஸில் உருவாக்கிய பேய்கள் மாசு படத்தின் அமெச்சூர்தனங்களில் தலையாயது.
 
4. மாரி
 
செஞ்சிருவேன் செஞ்சிருவேன் என்று சொல்லி இயக்குனரும், தனுஷும் சேர்ந்து செய்தேவிட்டார்கள். ரசிகர்களை ஆக மடையர்களாக நினைப்பவர்களால் மட்டுமே இப்படியொரு மோசமான படத்தை தர முடியும். தமிழ் சினிமாவின் ஹீரோ என்ற ரவுடியை நியாயப்படுத்தி வந்த படங்களில் இதற்குத்தான் முதலிடம். சும்மா மீசையை முறுக்கி, பந்தா காட்டி, சண்டைப் போட்டால் மீசையை இழக்க நேரிடும் என்பதை தெளிய வைத்து அடித்தது மாரி.
 
3. 10 எண்றதுக்குள்ள
 
அங்ககீனம் உள்ளவராக நடித்தால் மட்டுமே விக்ரமை பார்க்க முடிகிறது. சாதாரண கமர்ஷியல் கதையை தூக்கி சுமக்கிற கிளாமரும், மாஸும் விக்ரமுக்கு சுத்தமாக இல்லை என்பதை 10 எண்றதுக்குள்ள மேலுமொருமுறை நிரூபித்தது. கோலிசோடா படத்தின் கதை விஜய் மில்டன் சினிமா விமர்சகர் விஸ்வாமித்திரனிடமிருந்து திருடியது என்ற விமர்சனத்தில் உண்மை இருக்குமோ என்று எண்ண வைத்தது 10 எண்றதுக்குள்ள படத்தின் கதையும், திரைக்கதையும்.
 
2. புலி
 
திரைக்கதை மற்றும் காட்சிகளில் சிம்புதேவன் ரொம்ப வீக் என்பதை புலி நிரூபித்தது. ஃபேண்டஸி படங்கள் தமிழில் வருவதற்கான சாத்தியத்தை இரண்டாம் உலகம் கெடுத்தது என்றால் புலி குட்டிச் சுவராக்கியது. முதல் வாரம்வரை படம் 50 கோடியை தாண்டியது 100 கோடியை எட்டியது என்று பீலாவிட்ட தயாரிப்பாளரே கடைசியில் நஷ்டமோ நஷ்டம் என்று லெட்டர் எழுதினார்.


 
 
1. உத்தம வில்லன்
 
கமல் படமா கிளெஸ்டர் பாமா என்று திகைக்க வைக்கும் அளவுக்கு படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸை தரைமட்டமாக்கியது உத்தம வில்லன். ஒரு படத்தில் இரண்டு கதை சொல்லும் கமலின் பேராசைக்கு உத்தம வில்லன் களப்பலியானது. கிராபிக்ஸ் புலியையும், எலியையும் பார்த்தவர்களுக்கு, கமலை யார் பெர்பெக்ஷனிஸ்ட் என்றது என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். தவிர, காமெடி வேடங்களில் கலக்கும் கமல் உத்தமன் கதையில் காமெடியில் சொதப்பியது நம்ப முடியாத அதிசயம். எல்லாவகையிலும் இந்தப் பட்டியலில் முதலிடம் பெறும் தகுதி இந்த உத்தம வில்லனுக்கே.


இதில் மேலும் படிக்கவும் :