செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (18:05 IST)

தமிழக அரசு கலைப்பா...? நமது எம்ஜிஆர் நாளிதழில் கசிந்த தகவல்!!

அதிமுக அம்மா கட்சியின் நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழில் தமிழக அரசு கலைப்பா...? என்ற தலைப்பில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 
நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு, 
 
எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26 ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது. 
 
ஈபிஎஸ், ஓபிஎஸ் உட்பட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது.
 
அமைச்சர்களின் பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. 
 
இதேபோல 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திமுக ஆட்சியை இரவோடு இரவாக கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நடவடிக்கை எடுத்தார்.
 
அப்போது ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே.தவே போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல தற்போதும், ஆளுநரின் ஆலோசகராக ஓ.ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
 
இதையறிந்த ஆளும் தரப்பினர்கள் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படி கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப்போயிருக்கிறார்கள். 
 
இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளிதழில் செய்தி வெலியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்தும் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்காக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
அதேபோல், அமைச்சர் ஜெயகுமார், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.