1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (13:02 IST)

ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகள் போராட்டம்: வைரமுத்து ட்விட்!

கவிஞர் வைரமுத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். 
 
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் இந்தியா மட்டுமின்றி உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
 
இந்நிலையில் இந்த போராட்டத்தை நிறுத்த அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தி வந்தாலும், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் தான் முடிந்துள்ளன. இதனிடையே இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக விவசாயிகள் பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்தனர்.   
 
இந்த அழைப்பை ஏற்று இன்று பாரத் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடியும். அதன்படி, விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியிலும் பந்த் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனிடையே கவிஞர் வைரமுத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன; அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்.