'இனவாதத்தை சிங்கப்பூர் தவிர்க்க விரும்புகிறது' - அமைச்சர் திட்டவட்டம்
இனம்சார்ந்த பகுதிகள் உருவாவதை சிங்கப்பூர் தவிர்க்க விரும்புகிறது என்று சிங்கப்பூர் அரசின் உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, உள்துறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிலர் காவல் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டில், பிரான்சில் பல பயங்கரவாதத் தாக்குதல்களால், நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். அண்மையில், பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, ஆண் ஒருவர் கூட்டத்துக்குள் கனரக வாகனத்தைச் செலுத்தி 80க்கும் அதிகமானோரைக் கொன்றார்.
இத்தகைய கொடூரச் சம்பவங்களிலிருந்து சிங்கப்பூர் என்ன கற்றுக்கொள்கிறது என்று திரு சண்முகத்திடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சண்முகம், ”இரு நாடுகளின் வரலாறும் முற்றிலும் வேறுபட்டவை. பிரான்சில் அனைவரும் பிரெஞ்சுக்காரர்களாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் அப்படியல்ல.
நாம் வேறுபட்டவர்களாகவே காட்சியளிக்கிறோம். சிங்கப்பூருக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம். அது ஓரளவு வெற்றி அளித்திருக்கிறது. இருப்பினும், இனம் சார்ந்த வேறுபாடுகள் நம்மிடையே தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பேச்சுரிமை என்ற பெயரில் சமயம் சார்ந்த கேலிகளைப் பிரசுரம் செய்வதை, சிங்கப்பூர் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இனம்சார்ந்த பகுதிகள் உருவாவதை சிங்கப்பூர் தவிர்க்க விரும்புகிறது. வசிப்பிடங்களின் மூலம், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்க, இயன்றவரை முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர், தங்களுக்கும் சமுதாயத்தில் முக்கியப் பங்கிருக்கிறது, நியாயமான இடம் இருக்கிறது என்று உணரவேண்டும். நாடாளுமன்றம், தொழில்துறை, கல்வி அமைப்புகள் ஆகியவற்றில் அவர்களை முறையாகப் பிரதிநிதிப்பதன் மூலம் அது சாத்தியமாகும்.
இவற்றின் அடிப்படையில், சமயங்களுக்கும், இனங்களுக்கும் இடையில் உறுதியான பிணைப்பை உருவாக்குவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.