அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு பிரதமர் ஆதரவு! – இலங்கையில் குழப்பம்!
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கெ ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசிய பொருட்களே கிடைக்காம் அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிய நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பித்து தலைமறைவாகியுள்ளார். அதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது எதிர்கட்சியும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக பதவியமர்த்தியுள்ளார்.
ஆனாலும் அதை ஏற்காத மக்கள் ரணிலை பதவி விலக கோருவதோடு தொடர்ந்து அதிபர் ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ள புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே “வீட்டுக்கு செல் கோத்தா என்ற போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும். மேலும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கான பொறுப்பும் அவர்களுக்கு உண்டாகும்” என்று கூறியுள்ளார்.
தன்னை பிரதமர் பதவியில் அமர்த்திய அதிபர் கோத்தபயவுக்கு எதிராகவே ரணில் இவ்வாறு பேசியுள்ளது இலங்கை அரசியலில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.