திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (11:42 IST)

இந்தியாவிடம் அடைக்கலம் கேட்ட பாகிஸ்தானியர்... காரணம் என்ன??

பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒன்றான பலுாசிஸ்தானில், அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. பலுாசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கும்படியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.

 
இந்த அமைப்புகளுக்கு தலைமையேற்று போராடிய, பலுாச் தேசியவாத தலைவர் நவாப் அக்பர் புக்டி, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த 2006-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
 
அவரது மறைவுக்கு பின்னர் அக்பர் புக்டியின் பேரனான பிரகும்தாக் புக்டி, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பிச் சென்று அரசியல் அகதியாக தஞ்சம் அடைந்தார். அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றார்.
 
சமீபத்தில், பலுாசிஸ்தான் போராட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்ததையடுத்து, பிரகும்தாக் புக்டி, இந்தியாவில் அடைக்கலம் புக முடிவு செய்துள்ளார். இவரது முடிவுக்கு, பலுாசிஸ்தான் குடியரசு கட்சியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இந்நிலையில், சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று பிரகும்தாக் புக்டி, தனது விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
 
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சுதந்திர தின விழா பேச்சின்போது, பலூசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு இன்னும் 3-4 நாட்களில் ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையாக விண்ணப்பிக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.
 
தன்னைத் தொடர்ந்து மேலும் சில பலூசிஸ்தான் தலைவர்களும் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.