வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (08:54 IST)

நோபல் பரிசா ? எனக்கா ? – இம்ரான் கான் விளக்கம் !

சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிறப்பாகக் கையாண்டதாகப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரின் புல்வாமாப் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது எனும் தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

இந்திய விமானி ஒருவர் போர்க்கைதியாக சிக்கியதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றமடைந்தன. இந்தியா ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் உலக நாடுகளின் மூலம் அழுத்தம் கொடுத்து விமானி அபிநந்தனை விடுவிக்கக் கோரியது. இரு நாட்டின் அமைதிக்காவும் நல்லெண்ண அடிப்படையிலும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இரண்டே நாட்களில் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த  நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டன. இந்த பிரச்சனையை இந்தியப் பிரதமரை விட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டதாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இந்திய மக்கள் கூட சமூக வலைதளங்களில் தங்கள் நன்றியையும் பாராட்டையும் இம்ரான் கானுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் இப்பிரச்சனையை முன்னிட்டு இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் கையெழுத்து இயக்கம் நடத்த ஆரம்பித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சௌத்ரி ஃபாவத் ஹுசைன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்

இது மக்களிடையே பாராட்டையும் உலக அளவில் விமர்சனங்களையும் பெற்றது. இந்த விஷயம் குறித்து பதில் அளித்துள்ள இம்ரான் கான் ‘நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அங்கு அமைதி மற்றும் துணைக்கண்டத்தின் வளர்ச்சியை யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்க வேண்டும்’ என கூறியுள்ளார்.