தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள்.. டிரம்ப் அனுப்பிய இமெயிலால் பரபரப்பு..!
அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யலாம் என்ற திட்டத்தை ட்ரம்ப் அரசு கொண்டு வந்து, பல அரசு ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் அனுப்பிய நிலையில், சுமார் 50,000 பேர் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுவது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை, தபால் துறை தவிர பிற அரசு பணிகளில் 23 லட்சம் பேர் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் அரசு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்தால், அவர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முடிவு எடுக்க நேற்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாச காலத்திற்குள் மொத்தம் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதே நேரத்தில், இந்த திட்டத்திற்கு தற்காலிக தடை உத்தரவை கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்திய இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா, அல்லது அனுமதிக்கப்படுமா என்பதை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran