அடுத்த தேர்தலில் கனடா பிரதமர் தோல்வி அடைவார்: எலான் மஸ்க் கணிப்பு..!
கனடா பிரதமருக்கு நேரம் சரியில்லை என்றும், அவர் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார் என்றும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவை குற்றம் சாட்டிய விவகாரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளிடையே கனடா பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் சொந்த கட்சியினரே அவரை எதிர்த்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த எலான் மஸ்க், "கனடா பிரதமர் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்" என்று கருத்து தெரிவித்தார். இதற்கு ஒரு பயனர், "கனடாவில் அவரை அகற்ற உங்கள் உதவி தேவை" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள கனடா தேர்தலில் ட்ரூடோ தோல்வியடைவார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று எலான் மஸ்க் கூறியபடியே அவர் வெற்றி பெற்றதை போல் கனடா விஷயத்திலும் எலான் மஸ்க் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva