செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (14:12 IST)

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதால் இந்தியா சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

Modi Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 - 2021 காலகட்டத்தில் அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவி வகித்தார்.

அவருடைய கொள்கைகள் உலகம் முழுவதும் அறியப்பட்டவைதான். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் டிரம்பை பல முனைகளில் கையாள்வதில் அனுபவம் பெற்றுள்ளது.

 

நரேந்திர மோதியை தனது நண்பர் என்று பலமுறை குறிப்பிட்டுள்ள டிரம்ப், அதே நேரத்தில் இந்தியாவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார்.

 

இந்தத் தேர்தலில் பிரசாரத்தின்போது பிரதமர் மோதியின் பெயரை டிரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த முறை டிரம்ப்பின் வெற்றி, இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

 

பொருளாதாரம் மற்றும் வணிக உறவுகள்
 

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், அவரது பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவை முதன்மைப்படுத்தியே (America First) கவனம் செலுத்தும் என நம்பப்படுகிறது.

 

டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தின்போது அமெரிக்க தொழில் துறைகளைப் பாதுகாக்கும் கொள்கையைச் செயல்படுத்தினார். சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடும் வரி விதித்தார்.

 

மேலும், அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான வரிகளை நீக்க அல்லது குறைக்க இந்தியாவிடம் கேட்கப்பட்டது.

 

டிரம்ப் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார். எனவே, அமெரிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது அவரின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். இந்தியாவும் அதன் வரம்புக்குள் வர வாய்ப்புள்ளது.

 

சர்வதேச விவகாரங்களைக் கண்காணித்து வரும் பத்திரிகையாளர் ஷஷாங்க் மட்டூ தனது எக்ஸ் பக்கத்தில், "டிரம்பின் பார்வையில், இந்தியா வர்த்தக விதிகளை அதிகம் மீறுகிறது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை அவர் விரும்பவில்லை. டிரம்ப் தனது நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் 20 சதவீதம் வரை மட்டுமே இந்தியா வரி விதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

PM Modi
 

டிரம்பின் வரி விதிகளை அமல்படுத்தினால், 2028இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் வரை குறையும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

 

அதோடு, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 200 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் உள்ளது. டிரம்ப் கட்டண விகிதத்தை அதிகமாக உயர்த்தினால், இந்தியா பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் இந்தியாவின் இறக்குமதிகளின் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பணவீக்க விகிதம் அதிகரித்து, வட்டி விகிதத்தை அதிகம் குறைக்க முடியாத சூழல் ஏற்படும். வங்கிக் கடன்களின் மாதத் தவணைகள் அதிகரிக்கும். இது நுகர்வோர் மத்தியில் பிரச்னைகளை அதிகரிக்கலாம். குறிப்பாக வங்கிக் கடன் வாங்கி, மாதத் தவணை செலுத்தி வரும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

 

பாதுகாப்பு உறவுகள்

 

டொனால்ட் டிரம்ப் சீனாவின் தீவிர எதிர்ப்பாளராகக் கருதப்படுகிறார். அவரது முதல் பதவிக் காலத்தில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.

 

இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும். அவரது முதல் பதவிக் காலத்தில், அவர் குவாடை (Quad) வலுப்படுத்துவதில் மிகவும் தீவிரம் காட்டினார். `குவாட்’ என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளிடக்கிய கூட்டமைப்பாகும்.

 

 

டிரம்ப் அதிபரானால், இந்தியா-அமெரிக்கா இடையே ஆயுத ஏற்றுமதி, கூட்டு ராணுவப் பயிற்சி, இந்தியாவுடன் தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவற்றில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும்.

 

அமெரிக்க சிந்தனைக் குழுவான ராண்ட் கார்ப்பரேஷனின் இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன், தனது எக்ஸ் பக்கத்தில், "டிரம்ப் வெற்றி பெற்றால், பாதுகாப்புத் துறையில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய உத்திகள் தொடரும். இந்தியாவுக்கு பலன் கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஷஷாங்க் மட்டூ தனது பதிவில், "டிரம்ப் அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்தார். அவர் பிரதமர் நரேந்திர மோதியுடன் நல்ல உறவைப் பேணி, சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்" என்று எழுதியுள்ளார்.

 

டிரம்பின் விசா கொள்கை

 

டிரம்பின் கொள்கைகள் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு நிறைய பிரச்னைகளை உருவாக்கலாம். இந்த விவகாரத்தில் டிரம்ப் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். இது அமெரிக்க தேர்தலில் ஒரு முக்கியமான பிரச்னையாகப் பார்க்கப்பட்டது.

 

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்க மக்களின் வேலைகளைப் பறித்து வருவதாக அவர் கூறுகிறார்.

 

அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகின்றனர், அவர்கள் எச்1பி விசாவில் அங்கு செல்கின்றனர். டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் எச்1பி விசா விதிகளில் கடுமை காட்டினார். அதன் தாக்கம் இந்தியப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிரதிபலித்தது.

 

 

இந்தக் கொள்கை தொடர்ந்தால், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும். கடுமையான குடியேற்றக் கொள்கை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கக் கூடும்.

 

மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் நிலைப்பாடு

 

இந்தியாவின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து டிரம்ப் இதுவரை எதுவும் கூறவில்லை. இது மோதி அரசுக்குச் சாதகமான சூழ்நிலை.

 

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதுகூட, டிரம்ப் இந்தியாவின் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஆதரித்தார்.

 

இருப்பினும், பைடன் நிர்வாகம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தது.

 

கமலா ஹாரிஸ் 2021இல் பிரதமர் நரேந்திர மோதியிடம், "நாங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் அமைப்புகளைப் பாதுகாப்பது முக்கியம்" என்று கூறினார்.

 

ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டிரம்பைவிட ஜனநாயகக் கட்சி அதிபர்கள் மனித உரிமை தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர்.

 

டிரம்ப் பார்வையில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம்

 

கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவரும் சீனாவின் செயல்பாடுகளை நிறுத்த விரும்புகிறார்கள். இதற்கு ஆசியாவில் அதன் மிகவும் பொருத்தமான நட்பு நாடு இந்தியா. டிரம்ப் வெற்றி பெற்றால், சீனாவுக்கு எதிராக இந்தியா உடனான அவரது மூலோபாய ஒத்துழைப்பு வலுவடையும்.

 

அதே நேரம் ஆட்சிக் காலத்தில் டிரம்ப் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் மோதல்களில் ஈடுபடுவதைக் காண முடிந்தது.

 

டிரம்ப் ஆட்சியின் கீழ் ஜப்பான் மற்றும் தென் கொரியா உடனான உறவில் ஏற்பட்ட பதற்றத்தை இந்த விஷயத்தில் ஷஷாங்க் மட்டூ நினைவுபடுத்துகிறார்.

 

அவரின் பதிவில், "டிரம்ப் சீனாவிடம் இருந்து தைவானை பாதுகாப்பாரா இல்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அத்தகைய நிலைப்பாடு ஆசியாவில் அமெரிக்காவின் கூட்டணியைப் பலவீனப்படுத்தும். இது சீனாவின் நிலையை வலுப்படுத்தும். இது இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு இல்லை" எனக் கூறியுள்ளார்.

 

``காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்மொழிந்தார். அதை இந்தியா விரும்பவில்லை. அவர் தாலிபன்களுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற்றார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது."

 

வங்கதேச விவகாரத்தில் டிரம்ப் இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

 

சமீபத்தில், வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து சமூக ஊடக தளத்தில் அவர் பதிவிட்டார். "வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வங்கதேசத்தில் நடப்பது அராஜகம்” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

 

டிரம்ப் தனது பதிவில் "நான் அதிபராக இருந்திருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது. கமலா ஹாரிஸும் ஜோ பைடனும் உலகெங்கிலும் மற்றும் அமெரிக்காவிலும் உள்ள இந்துக்களை புறக்கணித்துள்ளனர். இஸ்ரேல் முதல் யுக்ரேன் வரை அவர்களின் கொள்கை மோசமானது. ஆனால் நாங்கள் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம்" என்றார்.

 

"தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்புக் கொள்கைகளில் இருந்து அமெரிக்க இந்துக்களைக் காப்பாற்றுவோம். எனது ஆட்சியின்போது, ​​இந்தியாவுடனும் நண்பர் நரேந்திர மோதியுடனும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

 

பாகிஸ்தானை பொறுத்தவரையில், நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தோ-பசிபிக் கொள்கை தொடர்பாக அமெரிக்கா குழப்பமான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது.

 

தி வில்சன் சென்டரின் தெற்காசிய இயக்குநர் மைக்கேல் குகல்மேன் பதிவில், "அமெரிக்க அதிகாரிகள் இதைப் பற்றிய குழப்பத்தில் உள்ளனர். அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கொள்கையில் பாகிஸ்தானின் நிலை என்ன? பாகிஸ்தான் சீனாவின் நட்பு நாடு, அமெரிக்கா இனி ஆப்கானிஸ்தானை கருத்தில் கொள்ளாது. ஏனெனில் அங்கு தலிபான்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தியா-ரஷ்யா உறவுகள் பற்றிய அமெரிக்காவின் பார்வை குறித்து மைக்கேல் குகல்மேனிடம் கேட்டபோது, ​​ரஷ்யா-இந்தியா உறவுகளில் டிரம்ப் மிகவும் தாராளம் காட்டலாம் என்று கூறினார். ஆனால் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் வரி விதிப்பில் அவர் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம்.

 

மூலோபாய விவகார நிபுணர் பிரம்மா செல்லனே தனது எக்ஸ் பக்கத்தில், "பைடன் நிர்வாகத்துடனான இந்தியாவின் புதிய பதற்றங்கள், குடியரசுக் கட்சி ஆட்சியின் கீழ் இந்தியா-அமெரிக்க உறவுகள் சிறப்பாக இருக்கும் என்ற பழைய கோட்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன," எனக் கூறியுள்ளார்.

 

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு

 

பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்பின் நிலைப்பாடு என்ன என்பது இந்தியாவுக்கு முக்கியம். ஏனெனில் அதில் இந்தியாவின் நலன்களும் உள்ளது.

 

ஜூலை 2019இல், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

 

அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இம்ரான் கானை வரவேற்றார். அப்போது, ​​காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பேசினார். காஷ்மீர் விவகாரத்தில்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோதி விரும்புவதாகவும் அவர் கூறினார்.

 

ஆனால் டிரம்பின் கூற்றை நிராகரித்த இந்தியா, பிரதமர் மோதி டிரம்பிடம் அப்படி எதுவும் கூறவில்லை என்று கூறியது. காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் ஒருவர் பேசிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

 

டிரம்பின் கருத்து இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அதை வரவேற்றது. காஷ்மீர் விவகாரத்தில் யார் மத்தியஸ்த செய்வதையும் ஏற்க மாட்டோம் என்பதுதான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.

 

டிரம்ப் மீண்டும் அதிபரானால், பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என பாகிஸ்தான் செனட்டர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்தார்.

 

அவர் தி இன்டிபென்டன்ட் உருதுவிடம் பேசுகையில், "டிரம்ப் பாகிஸ்தானை பொறுத்தவரை சிறந்த அதிபராக இருப்பார் என்று நான் கருதுகிறேன். இஸ்ரேல் விஷயத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. டிரம்ப் புதிய போர் உருவாகும் சூழலை ஏற்படுத்தப் போவதில்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களைத் திரும்ப அழைத்தார். ஒபாமாவோ அல்லது பைடனோ இதைச் செய்திருக்க முடியாது. கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வது குறித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்தான்” என்றார்.

 

ஹுசைன் மேலும் கூறுகையில், "குடியரசுக் கட்சி கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தது. இந்திரா காந்தி வங்கதேசத்தைப் பிரித்த பிறகு பாகிஸ்தானை தாக்க விரும்பினார். ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் இதை நடக்க விடவில்லை” என்றார்.

 

அமெரிக்கா உடனான தங்களின் பலன்களைச் சரியாகச் சமன் செய்ய முடியவில்லை என்றும் இந்த விஷயத்தில் அமெரிக்கா இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

 

"ஒன்று அவர்களின் உற்ற நட்பு நாடு மற்றும் மூலோபாய பங்காளி இந்தியா, மற்றொன்று அவர்களின் எதிரி சீனா. அத்தகைய சூழ்நிலையில், என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். சீனா எப்போதும் உறுதுணையாக நிற்கிறது. ஆனால் அமெரிக்கா சில நிபந்தனையுடன் துணை நிற்கிறது.” என்றார்.

 

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.