சிரியாவில் கார் வெடிகுண்டு: 68 குழந்தைகள் உள்பட 126 பேர் பரிதாப பலி
சிரியாவில் தீவிரவாதிகளின் கைவரிசையால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் நேற்று நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 68 குழந்தைகள் உட்பட 126 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதிகளான ஃபுவா மற்றும் கஃப்ராயா நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு மேற்கு அலெப்போ நகரின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர். மாற்று இடம் கிடைக்கும் வரை அவர்கள் அந்த பேருந்துகளிலேயே தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், வேகமாக வந்த கார் ஒன்று இந்த பேருந்துகளின் மீது மோதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் தங்கியிருந்த பேருந்துகள் வெடித்துச் சிதறின. பேருந்துகள் இருந்தவர்கள் மற்றும் அருகில் பாதுகாப்புக்கு இருந்தவர்கள் என மொத்தம் 126 பேர் இந்தத் தாக்குதலில் பலியானார்கள். இவர்களில் 68 பேர் பிஞ்சுக்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமானது என்று உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.