1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (17:29 IST)

பூச்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் அபுதாபி போலீஸ்

அபுதாபி போலீஸார் பூச்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்து வருகின்றனர்.

 
தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸார் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் அதுவும் அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
 
ஆனால், அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத வழக்குகளையும் அலசி ஆராய்ந்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விருகின்றனர். 
 
இதற்காக அவர்கள் பூச்சிகளையும் ரகசிய உளவாளிகளாக மாற்றியுள்ளனர். அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர். இது குறித்து அபுதாபி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 
குற்றச் சம்பவம் எப்போது நடந்தது?, எங்கு நடந்தது?, கொலையானவர் இறந்து எத்தனை மணிநேரம் இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே, கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, மறு இடத்தில் உடல் வீசப்பட்டால் மேல் குறிப்பிட்டவற்றை சரியாக யூகிக்க முடியாது. 
 
உடற்கூறு ஆய்வுகள் குற்ற புலனாய்வு விசாரணையில் கை கொடுத்தாலும், குற்றவாளிகளை நெருங்குவதில் தாமதம் ஏற்படலாம். இல்லையேல் காவல்துறையின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. அதனால்தான் தற்போது பூச்சி உளவாளிகளை பயன்படுத்துகிறோம்.
 
ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேசமயம் உடலை வீசிச்செல்ல வரும் கொலையாளிகளின் மீதும் உட்காரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. 
 
சில ஈக்களும், பூச்சிகளும் மனிதர்களின் உடல் திரவங்களை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதனால் கொலையாளிகளின் தகவலும், கொலை செய்யப்பட்டவரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன. 
 
அதனால் குற்றச்சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் சுற்றித்திரியும் பூச்சிகளை பிடித்து பரிசோதித்தால், எத்தனை நபர்கள் வந்தனர், யார் யார் வந்தனர், எப்போது வந்தனர் போன்ற தகவல்களை கண்டுபிடித்துவிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுவரை பூச்சி உளவாளிகளின் உதவியால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளனர்.