1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. வன உலா
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (12:25 IST)

தேக்கடிக்கு போகலாம் வாங்க!!!

தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி.




இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது.
தே‌க்கடி கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ. பரப்பளவிலான பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன. இங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தேக்கடி இருக்கிறது.

தேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா முழுவதும் அழகிய புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பு‌லிகள் சரணாலயம் என்பதை நினைவூட்டும் வகையில் இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக பூங்காவின் சுற்றுப்பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேக்கடி வனப்பகுதியில் நுழைவிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணச் சீட்டைக் கொண்டுதான் படகுப் பயணச் சீட்டு பெற முடியும். ஒருவருக்கு இரு நபர்களுக்கான பயணச் சீட்டுகளை மட்டுமே பெற முடியும். படகுப் பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு முழு முகவரியுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.



படகுப் பயண‌‌ச் சீட்டில் குறிப்பிட்டுள்ள படகு மற்றும் படகுக்கான இருக்கை எண்‌ணில்தான் அமர வேண்டும். படகில் பயணிகளின் பாதுகாப்பிற்கான காற்றடைத்த மேல் உடை தரப்படுகிறது. இதை அவசியம் அணிய வேண்டும். படகில் இருக்கையை விட்டு எழுந்து பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது. என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் பாதுகாப்பிற்காக கடைப்பிடிக்கப்படுகின்றன.

யானை ஏற்றம்!


இங்கு யானைகள் மீது அமர்ந்தபடி ஏரிப்பகுதியையும் இயற்கை அழகையும் ரசித்து வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானையின் முதுகில் வசதியாக அமர்ந்து கொள்வதற்கான சதுர வடிவிலான பாதுகாப்புடைய இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த யானை பயணத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.