திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (18:57 IST)

கோலி சோடா 2: திரைவிமர்சனம்

பிரபல இயக்குனர் விஜய் மில்டன் 'கோலி சோடா ' முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். அதில் சிறுவர்கள் ஒரு வில்லனை எதிர்த்து போராடுவார்கள். இதில் இளைஞர்கள் போராடுகின்றனர். இவை மட்டும்தான் வித்தியாசமா? திரைக்கதையிலும் வித்தியாசம் உள்ளதா? என்பதை தற்போது பார்ப்போம்
 
ஓட்டலில் வேலை செய்து கொண்டே பேஸ்கட் பால் விளையாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு இளைஞன், காதலியின் கட்டாயத்தால் ரவுடி கும்பலிடம் இருந்து விலகி நல்ல வேலைக்கு சென்று குடும்பஸ்தனாக வேண்டும் என்று விரும்பும் ஒரு இளைஞன், கடுமையான உழைப்பினால் ஆட்டோ ஓனரில் இருந்து கார் ஓனராக வேண்டும் என்ற லட்சியத்துன் ஒரு இளைஞன், இந்த மூன்று இளைஞர்களுக்கும் உதவுபவராக சமுத்திரக்கனி. மூவரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது திடீரென மூவரின் வாழ்க்கையில் மூன்று வில்லன்கள் குறுக்கிடுகின்றனர். இதனால் மூவரும் லட்சியமும் தூள் தூளாகிறது. பாதிக்கப்பட்ட மூவரும் ஒரு புள்ளியில் இணைந்து வில்லன்களை எப்படி பழிவாங்குகின்றனர் என்பதுதான் இரண்டாம் பாதி.
 
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று கூறினால் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன். இருவருமே தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். படம் முழுவதும் தனது நடிப்பினால் சமுத்திரக்கனி பெயர் வாங்கினாலும் கடைசி ஐந்து நிமிடங்களில் அவரை ஓவர்டேக் செய்துவிடுகிறார் கவுதம் மேனன்
 
மூன்று இளைஞர்களும், அவர்களுக்கு ஜோடியாக நடித்த மூன்று ஹீரோயின்களும், மூன்று வில்லன்களையும் இயக்குனர் விஜய் மில்டன் சரியாக தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையும் வாங்கியுள்ளார். இதனால் படம் யதார்த்ததுடன் செல்கிறது. அதேபோல் சீனியர் நடிகைகளான ரோகினி மற்றும் ரேகா காட்சிகளும் சூப்பர். குறிப்பாக ரோகினி தனது பிளாஷ்பேக்கை ஓவியங்கள் மூலம் தனது மருமகனுக்கு சொல்லும் காட்சியில் அரங்கமே கைதட்டுகிறது.
 
அச்சுராஜாமணியின் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் ஓகே. இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிக்கேற்ற ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
 
இருப்பினும் ஒரு இயக்குனராக படத்தின் யதார்த்தத்தை மிஸ் செய்துவிட்டார் விஜய் மில்டன். நூற்றுக்கணக்கான ரெளடி கும்பல்களிடம் இருந்து மூன்று இளைஞர்கள் தப்பித்து செல்வது, கிளைமாக்ஸில் மூன்று பேர் முந்நூறு பேர்களை அடித்து நொறுக்குவது ஆகிய நம்ப முடியாத ஆக்சன் காட்சிகள் படத்தின் மைனஸ்
 
மொதத்தில் முதல் பாகம் அளவுக்கு இந்த சோடா, ரசிகர்களின் தாகத்தை தணிக்கவில்லை. இருப்பினும் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் மற்றும் மூன்று இளைஞர்களின் யதார்த்தமான நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம்
 
2,5/5