செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (14:04 IST)

கமல் பாஜகவின் பி டீம்: டி.ராஜா பேட்டி!

மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

 
கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் எனத் தெரிவித்தார். மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் ஆதரவை பெற்றுள்ளது எனவும், பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். 
 
இந்திய அரசியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு தகர்த்து வருகிறது எனவும், பாஜக வெறும் அரசியல் கட்சியல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு எனவும் கூறிய அவர், மதவெறி பாசிச ஆட்சியை நிலை நிறுத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முயற்சிக்கிறது எனத் தெரிவித்தார். பாஜக தமிழ்நாட்டில் காலுன்றி விடக்கூடாது. பாஜக தமிழகத்தை கபளீகரம் செய்துவிடும் எனவும், அதிமுகவை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில்  காலுன்ற பார்க்கிறது எனவும் அவர் கூறினார். 
 
அதிமுக அரசு மாநில உரிமைகள் மற்றும் மாநில நலன்களை காப்பாற்றுவதில் மிகப் பெரிய தோல்வியை கண்டுள்ளது எனவும், அதிமுக, பாஜக பிரதமர் மோடி படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாதது, தோல்வி பயத்தை காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இணைந்து பிரச்சாரம் செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது எனவும், இது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் கூறினார். 
 
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுகவிற்கு கொள்கைகள் உள்ளது எனக்கூறிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன என கேள்வி எழுப்பினார். மக்கள் ஏன் கமல்ஹாசனை பாஜகவின் பி டீம் என சந்தேகப்படுகிறார்கள் எனக்கேட்ட அவர், அதற்கு கமல்ஹாசன் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்தார்.