அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்கு சரிந்து வரும் நிலையில் டெஸ்லாவின் புதிய காரை வாங்கி அதற்கு விளம்பரம் செய்து வருகிறார் அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற அதிபர் ட்ரம்ப், தனது நண்பரான எலான் மஸ்க்கிற்கு அரசாங்களில் பொறுப்புகளை வழங்கினார். அதன்பிறகு ஏராளமான அமெரிக்க அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் அறிவிப்பு செய்யப்பட்டது, மேலும் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டதால் பல பகுதிகளிலும் மக்கள் எலான் மஸ்க்கிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்திற்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்ரம்ப் ஒரு வேலையை செய்துள்ளார், வெள்ளை மாளிகை முன்பு ஏராளமான டெஸ்லா மாடல் கார்களை நிற்க வைத்து அதில் தனக்கு பிடித்தமான ஒரு காரை ட்ரம்ப் தேர்வு செய்கிறார். அதற்கு சலுகை தருவதாக எலான் மஸ்க் கூறியும் ஏற்காமல் அதன் அசல் விலைக்கே வாங்கியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த அவர், டெஸ்லா கார்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்காவில் எழுந்துள்ளது. மேலும் அந்நிறுவன பங்குகள் சரிவை சந்தித்து வரும் நிலையில் எலான் மஸ்க்கிற்கு ஆதரவு தெரிவிக்க டெஸ்லா கார்களை வாங்குகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் டெஸ்லா நிறுவனத்தின் ஷோ ரூம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் குறித்து பேசிய அவர் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள். அவர்கள் எங்களிடம் சிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
Edit by Prasanth.K