பொன்னியின் செல்வனில் சிம்பு நடிக்காததற்கு நான்தான் காரணமா? ஜெயம் ரவி பதில்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் சென்னையில் நேற்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் ஜெயம் ரவியிடம் “ படத்தில் வந்தியத்தேவனாக நடிக்க சிம்புவைதான் அணுகியதாகவும், ஆனால் நீங்கள் அவர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகிறதே” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி “முதலில் நான் அப்படி சொன்னால் அதைக் கேட்கக் கூடிய ஆளா மணிரத்னம் சார். மேலும் இதுபற்றி சிம்புவே என்னிடம் பேசினார். நான் இருந்தால் அதில் மகிழ்ச்சியடையக் கூடிய முதல் ஆளாக நீதான் இருப்பாய் எனக் கூறினார்” என்று பதிலளித்துள்ளார்.