விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிரான அணிக்கு பாக்யராஜ் வைத்த பெயர்!
நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி ஏற்கனவே களமிறங்கி வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. இந்த அணிக்கு எதிராக நடிகரும், தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஐசரி கணேஷ் ஒரு புதிய அணியை உருவாக்கியுள்ளார். பாக்யராஜ் தலைமையேற்கும் இந்த அணி தற்போது தேர்தல் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுவாமி சங்கரதாஸ் என்பவர் நாடகக்கலையின் குரு என்பதால் அவரது பெயரை பாக்யராஜ் தேர்வு செய்துள்ளார்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு ஜெயம் ரவி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. மேலும் துணைத்தலைவர் பதவிகளுக்கு தனுஷ், சிம்பு போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும், உறுப்பினர்கள் பதவிகளுக்கு முக்கிய நடிகர்கள் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது
தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலில் பாண்டவர் அணி-சுவாமி சங்கரதாஸ் அணி மோதுவது உறுதி செய்யப்பட்டுவிட்டதால் இந்த முறை தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது