கங்குவா மேடையில் போஸ் வெங்கட் அப்படி பேசியிருக்கக் கூடாது… ஆர் ஜே பாலாஜி கருத்து!
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானக் காரணமாக ஒன்றை சொல்லலாம். படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தைப் பற்றி படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்தான் அது. செல்லும் மேடைகளில் எல்லாம் அவர்கள் ஆற்றிய புகழுரைகள் ரசிகர்களுக்கு திகட்டுமளவுக்கு அமைந்தது.
அப்படி ஒரு சம்பவமாக அமைந்தது கங்குவா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசியது. அவர் தான் சார்ந்த திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்யை மட்டம் தட்டி பேச சூர்யாவை அரசியலுக்கு வர சொல்லி அந்த மேடையில் பேசினார். அதனால் விஜய் ரசிகர்களுக்கு கங்குவா மேல் ஒரு அதிருப்தி உருவானது. அது பட ரிலீஸ் சமயத்தில் பிரதிபலித்தது.
இந்நிலையில் போஸ் வெங்கட்டின் அந்த பேச்சு குறித்து நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி தற்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார், அதில் “ஒரு பெரிய நடிகர், சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வருகிரார். அவரை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதை கங்குவா மேடையில் பேசி, அந்த விழாவின் கருத்தாக மாற்றியது தவறு. அதை நான் அந்த மேடையில் தெளிவுபடுத்த வேண்டுமென்று நினைத்துப் பேசினேன்.
சூர்யா சார் ஒருமாதிரி அரசியல் பண்ணுகிறார். அவர் நிறையப் பேரை படிக்க வைக்கிறார். அதுவே பெரிய அரசியல். அதனால் நீங்கள் அந்த அரசியலிலேயே இருங்கள். ஏன் எல்லோரும் ஒரே மாதிரி அரசியல் பண்ண வேண்டும் எனப் பேசினேன்” எனப் பதிலளித்துள்ளார்.