1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (06:48 IST)

அமீர் பிரச்சனையில் சுதா கொங்கராவைக் கோர்த்துவிட்ட ஞானவேல் ராஜா.. பதறியடித்து விளக்கம்!

கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.

அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் ஞானவேல் ராஜா தந்த ஒரு பேட்டியில் போகிற போக்கில் “இயக்குனர் அமீர் இயக்கிய ராம் படத்தை நான், கார்த்தி மற்றும் சுதா கொங்கரா ஆகிய மூவரும் ஒன்றாக பார்த்தோம். அந்த படத்தின் மேக்கிங் சுதா அக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.” எனக் கூற, அமீர் ஆதரவு ரசிகர்கல் சுதா கொங்கராவை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து சுதா கொங்கரா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “2016 ஆம் ஆண்டு இறுதி சுற்று ரிலீஸான சமயத்தில் அமீர் அண்ணா என்னை அழைத்து பாராட்டினார். அந்த தருணம் இப்போதும் எனக்கு நினைவில் உள்ளது. அவரிடம் நான் என்னுடைய மதி கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது உங்கள் முத்தழகுதான் எனக் கூறினேன். எனது படங்களில் நடித்த இரு நடிகைகளை பருத்திவீரன் படத்தின் முத்தழகு கதாபாத்திரத்தை பார்க்க வைத்தேன்.  தமிழ் சினிமாவின் முக்கியப் படைப்பாளிக்கு நான் செலுத்திய மரியாதை இது. நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.