புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 அக்டோபர் 2018 (17:30 IST)

நட்சத்திரங்களை உருவாக்கிய கூத்துப்பட்டறை பிரம்மா ந.முத்துசாமி

கூத்துப்பட்டறையின் தந்தை என்று திரையுலக நட்சத்திரங்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ந.முத்துசாமி. அவர் இன்று யாரும் நெருங்கி வரமுடியாத உயரத்திற்கு சென்று விண்ணில் ஆவியாகி விட்டார். அதனால் மொத்த திரையுலகமும் தம் தந்தையை இழந்துவிட்ட தனயன்களாக சோகம் தழுவி நிற்கின்றனர்.
கல்லைச் செதுக்குவதற்கு ஒரு சிற்பி வேண்டும். தாஜ்மஹால் போன்ற ஒரு கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட நிபுணர் வேண்டும். கதைகள் படைக்க நல்ல கதாசிரியர் வேண்டும்.அப்படித்தான் இன்று உலகையே தன்வசமாக திருப்பி அனைத்துநாட்டு மக்களுக்கும் மிக முக்கியதொரு பொழுது போக்கு அம்சமாக மாறியிருக்கும் சினிமா உலகினை அவ்வளவு சாதாரணமாக நாம் புறந்தள்ளி விட முடியாது.காரணம் தமிழகத்தில் மூன்று முதலைமைச்சர்கள் சினிமா துறையிலிருந்துதான் வந்து மக்கள் மக்கள் மனதில் நின்று ஆட்சி செய்தார்கள்.
 
அந்த வகையில் இந்தியாவில் நான்கு தூண்களில் ஒன்றான இந்த ஊடகத்துறை எல்லா தரப்பினரையும் கட்டிப்போட்டு தலையாட்டி பொம்மைகளாக  வைத்துள்ளதென்றால் அது  மிகையல்ல.
திரையுலகிற்குள்  நுழைபவர்களுக்கு புள்ளையார் சுழியாக கருதப்படுவது  கூத்துப்பட்டறை. இதன் பேர் பலருக்கு குறிப்பாக திரைத்துறையுலகிற்குள் காலெடுத்து வைக்க முயற்சி செய்யும் இளைஞர்களும் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை இந்தக் கூத்துப்பட்டறைக்கும் வழங்குவார்கள். காரணம், வெறும் கல்லாக நுழைபவர்கள் இந்த கூத்துப்பட்டரையின் மூலம் செதுக்கப்பட்டு வைரம் போன்ற மதிப்புடன் தன் மதிப்பு பெற்ற கலைஞர்களாக பரிமாணத்துடன்  வெளியே வருகிறார்கள்.
 
இப்படி கூத்துப்பட்டறைக்குள் பல எதிர்காலக் கனவுகளுடன் நுழைகிற நபர்களை தேர்ந்த நடிகர்களாக பரிமாணம் பெற வைத்ததில் சென்னை கூத்துப்பட்டறையை நடத்தி வந்த ந.முத்துசாமி குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
 
இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில்  பிறந்தவர் .நாடகத்தின் மீது தணியாத தாகம் கொண்டவர். காலம் காலமாக என்ற நாடகத்தை எழுதி நடித்தன் மூலம் புகழ் பெற்றார்.தெருக்கூத்தை தமிழ்க்கலையின் அடையாளமாக்கியவர்களில் இவரும் ஒருவர்.கடந்த 2000 ஆம் ஆண்டில் சங்கீத அகாதமியின் விருது பெற்றிருக்கிறார்.இவரது கூத்துப்பட்டறை சென்னையில் வெகு பிரபலம். சினிமாத்துறைக்குள் நுழைய இவர் அளித்து வந்த பயிற்சியாவது தமிழில் பரிசோதனை நாடகத்திற்கும் பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தது.
 
மேலும் கலை இலக்கியத்தில் பெருத்த ஆர்வம் கொண்ட ந.முத்துசாமி ’கடதபற’ ’நடை’போன்ற இலக்கிய இதழ்களில்  அருமையான பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தமிழில் ஆளுமைகள் என்று சொல்லப்படுவோர் பலரும் தடம் பதிக்கும் ஒரு தளமான கட்டுரையிலும் இவர் ‘ந.முத்துசாமி கட்டுரைகள்’ எனும் நூல் வெளியிட்டு இலக்கிய வெளியில் தன்னை படைப்பாளியாக பரவலாக அறிமுகம் செய்துகொண்டார். இந்த கட்டுரை நூலுக்கு 2005 ஆம் ஆண்டில் சிறந்த நூல்களில் நுண்கலைகள் ( இசை,நடனம்,சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருந்தது.
 
இவரது கலை சேவையைப் பராட்டி இந்திய அரசு கடந்த 2012 ஆன் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
 
மேலும் இந்திரா பார்த்த சாரதி எழுதிய நாவலான குருதிப்புனல் கண்  சிவந்தால் மண் சிவக்கும் என்ற படமாக எடுக்கப்பட்ட போது அந்த படத்தில் இயக்குநர் ஸ்ரீதர்ராஜர் உடன் இணைந்து வசனகர்த்தாகவாகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக அவர் தமிழரசி என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இவருக்கு  82 வயது ஆகியிருந்த நிலையில் வயது முதிர்வின் காரணாக சென்னையில் இன்று காலமானார்.   
குணச்சித்திர நடிகராக அடையாளம் காணப்படும் நாசர், பசுபதி, மக்கள்செல்வன் விஜய் சேதுபதி, விமல், பாபி சின்ஹா, ஜோக்கர் படத்தில் நடித்த சோம சுந்தரம் உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
 
இவரது இழப்பு தமிழ் திரைத்துறையினருக்கும் குறிப்பாக  கூத்துப்பட்டறையினருக்கும் நிகர் செய்ய செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இவரது மறைவிற்கு பலர் இரங்கள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தன் இரங்கல் செய்தியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.