ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு: ரஜினிகாந்த் அறிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களில் ஓரிரு முறை கொரோனா வைரஸ் குறித்தும், ரசிகர்களும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வீடியோ, அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சற்றுமுன் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை. எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும்,
உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை
அணியாமலும் இருக்காதீர்கள்.
ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு
இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்