தமிழ்நாட்டில் ஷுட்டிங் வைங்க… அஜித்துக்கு நேரடியாகக் கோரிக்கை வைத்த ஆர் கே செல்வமணி!
தொடர்ச்சியாக அஜித் படத்தின் ஷுட்டிங்குகள் ஐதராபாத்தில் நடந்து வருவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், துணை தலைவர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் ஆர் கே செல்வமணி கலந்துகொண்டார். அப்போது பல விஷயங்களைப் பேசிய அவர், பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடப்பது பற்றி பேசியபோது “நடிகர் அஜித் குமாரிடம் நேரிடையாக கோரிக்கை வைக்கிறோம், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால், இங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த கோரிக்கையை நடிகர் அஜித் குமார் ஏற்றுகொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.