எழுந்து வா பாலு.. விரைந்து வா.. கலைப்புலி எஸ் தாணு அழைப்பு
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கவிதை வடிவில் ஒரு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
வானுதிர்த்த கதிராக நெல்லூரில் வந்துதிர்த்த இசையே!
குழலினிதா? யாழினிதா? என்றால் நின் குரலே இனிதென்பேன்.
முக்கனி சாறெடுத்து கொம்புத்தேனில் முகிழ்தெடுத்த
அருஞ்சுவைக்கு மேலானது நின் குரல் சுவையென்பேன்
அங்கிங்கெனாதபடி எங்கும் நின் குரல் கேட்க
எட்டு திக்கும் எதிரொலிக்க எழுந்து வா பாலு!
விரைந்து வா!
இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா!
பாலு விரைந்து வா!
தேனிசைத் தென்றலும் ஏழு சுரங்களும்
உன் வரவுக்காக காத்திருக்க ..
எழுந்து வா பாலு விரைந்து வா!
பாரதிராஜா வேண்டியபடி அகிலம் ஆண்டவனை பிரார்த்திக்க.
நீ வருவாய் திருவாய் மலர்வாய்
இவ்வாறு கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்