ரஜினிக்குப் பதில் சாய் பல்லவி - லைகா நிறுவனத்தின் திட்டம்
ரஜினியின் படம் ரிலீஸாக வேண்டிய தேதியில், சாய் பல்லவி நடித்த படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கிராஃபிக்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால், ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம்தான் ‘2.0’ ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.
எனவே, ‘2.0’ படத்துக்காக புக் செய்து வைத்திருந்த தியேட்டர்களில், தங்களுடைய இன்னொரு படமான ‘கரு’வை 26ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம். விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகிறார். அபார்ஷனை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.