கருணாநிதியின் புகைப்படங்களை வெளியிட எதிர்ப்பு : கருணாகரன் பதிலடி
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகி வருவது தொடர்பாக எழும் விமர்சனத்துக்கு நடிகர் கருணாகரன் பதில் அளித்துள்ளார்
திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நலம் மோசமடைந்துவிட்டதாக, திடீரென வதந்தி பரவியது. தொடர்ந்து தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
இதில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை சந்தித்த புகைப்படங்கள் திமுக சார்பில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இப்படி புகைப்படங்களை வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அந்த புகைப்படங்கள் அவரை காயப்படுத்தலாம்” என்று சமூக வலைதளத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் கருணாகரன், ”ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை என்பது பொதுமக்களின் வாழ்க்கையை விட வித்தியாசமானது, கடினமானது. அவர்கள் பல வருடங்கள் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களது உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். இதற்கு நாம் வைத்திருக்கும் அன்பே காரணம். இங்கு யாரும் எதையும் நிரூபிக்கவில்லை. நீங்கள் வருத்தமடைந்திருப்பதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையினால்தான்'' என்று தெரிவித்துள்ளார்.