வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (13:26 IST)

நானும் சவ்கிதார்தான் – மோடியைக் கலாய்த்த படக்குழு !

நானும் காவலாளிதான் என சமூகவலைதளங்களில் பிரதமர் மோடி டிரண்ட் செய்த ஹேஷ்டேக் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்று பேசியிருந்தார்.  ஆனால் இப்பொழுது ரஃபேல் ஊழலில் மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் தன்னைக் காவலாளி எனக் கூறிவரும் பிரதமர் ஒரு திருடன் எனக் கூறிவருகிறார்.

இதனால் பிரதமர் மோடி தனது பெயரை டிவிட்டடில் சவுகிதார் (காவலாளி) நரேந்தர மோடி என மாற்றியுள்ளார். மேலும் ‘உங்களுடைய காவலாளிக்கு ஆதரவாகவும், தேசத்துக்குச் சேவை செய்யும் துணையாகவும் இருங்கள். நான் தனியாக இல்லை. ஊழலுக்கும், தேசத்தில் சமூகக் கொடுமைக்கும் எதிராகப் போராடும் ஒவ்வொருவரும் காவலாளிதான். ஆதலால், காவலாளியாகிய நான் தனியாக இல்லை. தேசத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள்’ என மக்களையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் தங்கள் பெயருக்கு முன்னால் சவ்கிதார் என்பதை சேர்த்து பரப்பி வருகின்றனர். இந்த சவ்கிதார் சமூக வலைதளங்களில் பயங்கரமாகக் கலாய்க்கப்பட்டு வருகிறது. அரசியல் தளத்தில் கேலி செய்யப்பட்டதை அடுத்து இப்போது திரையுலகினரும் இந்த சவ்கிதார் விஷயத்தைக் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வாட்ச்மேன் என்ற படம் தயாராகி ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலிஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இதையடுத்து படத்தின் புரோமோஷன்களில் அந்த நாய் நானும் காவலாளிதான் எனக் கூறுவது போல வெளியிட்டு வருகின்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.