படமாயா அது.. கருமம்.. கருமம்! - இரண்டாம் குத்தால் நொந்த பாரதிராஜா!
சமீபத்தில் வெளியான “இரண்டாம் குத்து” பட போஸ்டர் குறித்து இயக்குனர் பாரதிராஜா ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழில் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது தானே இயக்கி நடித்துள்ள படம் “இரண்டாம் குத்து”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஆடையின்றி செய்திதாளால் உடலை மூடியிருக்குமாறு வெளியான போஸ்டர் இளைஞர்களிடையே கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், சமூக ஆர்வலர்களால் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் அந்த போஸ்டர் விளம்பரம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா “இரண்டாம் குத்து பட விளம்பரத்தை கண்ணால் பார்க்கவே கூசுகிறது. சினிமா வியாபாரம்தான்.. ஆனால் இப்படி கேவலமான நிலைக்கு அந்த வியாபாரம் வந்து விட்டது வேதனை தருகிறது. கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம்” என கேள்வியெழுப்பியுள்ளார்.