செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:14 IST)

மன்றாடி கேட்கிறோம், மனது வைங்கள்: பாரதிராஜா உருக்கமான கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
தமிழக அமைச்சரவை ஏற்கனவே ஏழு பேரை விடுவிக்க தீர்மானம் இயற்றியும் அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் திரையுலக பிரபலங்கள் பலர் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை விடுத்தனர் என்பதை பார்த்தோம்
 
 இந்த நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா இதுகுறித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக் கட்சி தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்திற்கு உரியது
 
தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதில் கண்ணீர் மல்க காத்து இருப்பது வேதனைக்குரியது. மதிப்புமிக்க ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிக் கேட்கின்றோம், மனது வையுங்கள். உடனே விடுதலை தாருங்கள்’ என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்