அபராதத்தை கட்டியும் சசி-க்கு ஆப்பு: பொய்த்துப்போன விடுதலை சலுகை கனவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.
ஆனால், இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, அபராதம் செலுத்தி விட்டதால் மட்டும் சசிகலா உடனடியாக விடுதலையாக வாய்ப்பில்லை. அபராதம் செலுத்தினாலும் ஜனவரி 20-க்கு பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார். இன்னும் அவரது விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார்.
ஆனால், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகை காலத்தை அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் இது குறித்து சற்றுமுன் கர்நாடக உள்துறை அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.