அதிக முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை தக்கவைத்த ஏ ஆர் ரஹ்மான்!
சில மணிநேரங்களுக்கு முன்னர் 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது ஏ ஆர் ரஹ்மான் வாங்கும் ஏழாவது தேசிய விருதாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார் ரஹ்மான். அவருக்கு அடுத்த இடத்தில் இளையராஜா 5 விருதுகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இது ஒருபுறம் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் ஒரு சர்ச்சை கிளம்பி வருகிறது. சமீப சில ஆண்டுகளாக தேசிய விருதுகள் மக்களிடம் கலையுணர்வைத் தூண்டும் பெரிய அளவில் அங்கீகாரம் பெறாத படங்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக கமர்ஷியலாக வெற்றி பெற்ற மாஸ் மசாலா படங்களுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு கூட பெரும்பாலும் பொழுதுபோக்கு தன்மை கொண்ட படங்கள் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.