சுவையான பருப்பு போளி செய்ய...!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
ஏலக்காய் - 3
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் கலர் - சிறிதளவு(தேவையானால்)
நெய் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
வெல்லத்தினை தூளக்கி கொள்ளவும். ஏலக்காயினை சர்க்கரையுடன் சேர்த்து பொடித்து வைக்கவும். கடலை பருப்பினை 15 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
கடலை பருப்பு நன்றாக வெந்த பிறகு தண்ணீரினை வடித்து சிறிது நேரம் காய விடவும். கடாயில் வெல்லத்தினை போட்டு 3 நிமிடம் வைத்திருக்கவும். தண்ணீர் வடித்து ஆற வைத்துள்ள கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த அரைத்த கடலை பருப்பை வெல்லத்துடன் சேர்த்து கிளறவும். அதில் சிறிது சிறிதாக நெய்(ஒரு மேசைக்கரண்டி) சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறவும். கடைசியில் பொடித்து வைத்துள்ள ஏலக்காயினை சேர்த்து கிளறவும். போளியின் உள்ளே வைக்கும் பூரணம் தயார்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, மஞ்சள் கலர் மற்றும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும். அதன் பின்னர் செய்து வைத்திருக்கும் பூரணத்தை கையில் நெய் தடவிக் கொண்டு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். அதைப் போல் பிசைந்து வைத்த மைதா மாவிலும் உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடி மீண்டும் தேய்க்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் செய்து வைத்துள்ள போளியை போட்டு வேக விடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு மற்றொரு பக்கம் திருப்பி போட்டு சிறிது நெய் ஊற்றி வேக விடவும். சுவையான போளி தயார்.