திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:37 IST)

புரோக்கர்கள் ஜாக்கிரதை! – கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐசிசி!

கொரோனா பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் ரத்தான சூழலில் சூதாட்ட புரோக்கர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு வலை விரிப்பதாக ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவது வேகமாக பரவியுள்ளதால் சர்வதேச, உள்ளூர் என பாகுபாடில்லாமல் அனைத்து வகை விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் முன்பை விட அதிகமாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் “சூதாட்ட புரோக்கர்கள் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். ஏனென்றால் கிரிக்கெட் வீரர்கள் முன்பை விட தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், ரசிகர்களோடு பேசுவதுமாக இருக்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி ரசிகர்கள் போல பேசி சிலர் அவர்களோடு நட்பு கொள்ள முயற்சிக்கலாம். போட்டிகள் ரத்தாகி உள்ளதால் வீரர்களுக்கு வருமானம் குறைந்திருப்பது அவர்களுக்கு வலை விரிக்க சாதகமாக இருக்கும். பிறகு எதிர்காலத்தில் போட்டிகள் நடக்கும்போது சூதாட்டத்தில் ஈடுபட அவர்களை தூண்டலாம். எனவே வீரர்கள் இதுபோன்ற சூதாட்ட வலைகளில் விழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து பதிலளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் “இந்திய வீரர்களும் நாங்களும் ஒரே அணியாக செயல்படுகிறோம். சூதாட்டம் எந்த வகையிலும் உள்ளே வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.