1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 மார்ச் 2025 (18:09 IST)

மெட்ரோவில் இலவச பயணம்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே  கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ்  தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2025 ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ்  கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயல்பட உள்ளது.
 
ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு மெட்ரோ சேவைகளை தடையின்றி வழங்க, மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிஎஸ்கே போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ சேவைகள் இரவு நேரத்தில் நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், ஐபிஎல் போட்டிக்கான சிறப்பு பயணச்சீட்டை  வைத்திருப்பவர்கள், எந்தவொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் அரசினர் தோட்டம்   மெட்ரோ நிலையத்திற்குள் இலவசமாக பயணிக்கலாம்.
 
போட்டிகள் நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவைக்கேற்ப, மெட்ரோ சேவைகள் அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாக கடைசி மெட்ரோ நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23ஆம் தேதி செப்பாக்கத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.
 
மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
Edited by Mahendran