ஓம் என்பதை பிரணவ மந்திரம் என கூறப்படுவது ஏன்...?
மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.
ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.
பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் ‘அ’ என்பது முதலில் தோன்றுவதால் ‘அ’காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், ‘உ’ என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் ‘உ’காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், ‘ம்’ என்பது முடித்து வைப்பதால் ‘ம’காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.
எனவே ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.
அதாவது உயிரில் இருந்து பிராணனில் இருந்து ஓம் மந்திரம் உருவாகி வெளியில் வருகிறது. இதனால்தான் ஓம் மந்திரத்துக்கு பிரணவ மந்திரம் என்ற பெயர் உண்டானது.
பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ ஓம் எனும் மந்திரம் அவசியம். அதனால்தான் ஓம் எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.