புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோகுலாஷ்டமி அன்று பலகாரங்கள் செய்யப்படுவது ஏன்...?

கோகுலாஷ்டமி அன்று இல்லங்களைத் தூய்மை செய்து, வாசல் முழுக்க கோலமிட்டு, வாயிற்படியிலிருந்து பூஜையறை வரை கண்ணனின் திருப்பாதங்களை மாக்கோலத்தால் வரைந்து அழகு பார்ப்பார்கள். 


கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து பூஜையறைக்கு வந்து நாம் வைத்துள்ள நிவேதனப் பட்சணங்களை  ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.
 
சிறு பிள்ளையாய் இருந்த கிருஷ்ணன் பெரும் குறும்புக்காரன். அடுத்த வீடுகளுக்குள் நுழைந்து, உறியிலிருந்து வெண்ணெய் திருடும்போது, வெண்ணெய் கீழே சிந்தி அதில் அவன் பாதச் சுவடுகள் பதிந்து இருக்கும் அடையாளத்தை வைத்து, திருட்டுக்கண்ணன் தங்கள் வீட்டில் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்று  கோகுலவாசிகள் அறிந்து மகிழ்ச்சி அடைவார்களாம். இதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே, கிருஷ்ணன் பிறந்த நாளன்று, வீடுகளில் வெண்ணெய்யினால் கண்ணனின்  பாதச் சுவடு களை வரைவதைப் பழக்கமாகக் கொண்டனர்.
 
கோகுலாஷ்டமி அன்று இனிப்புப் பலகாரங்கள், குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல், பால், திரட்டுப்பால், பழங்கள், தயிர், வெல்ல சீடை, கார  சீடை, கார வகைகள் நிவேதனம் செய்யப்படும். கிருஷ்ணன் குழந்தையாக யசோதையிடம் வளர்ந்த போது, குழந்தையின் உடம்புக்கு நோய் வராமல் இருக்க சத்து  நிறைந்த சீடை, முறுக்கு முதலிய சிற்றுண்டிகளை அளித்தாள். அதனால், பூஜையின்போது இச்சிற்றுண்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
 
குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது நிவேதனத்தில் பின் கிருஷ்ணனுக்குத் தூப, தீபங்கள் காட்டி ஆராதித்து வழிபாடு செய்யவேண்டும்.
 
பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால், இரவு முழுவதும் பூஜை மற்றும்  பஜனைப் பாடல்கள் நடத்தப்படுகின்றன.
 
பூஜையின் போது ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம் சொல்லி வழிபடுவது மிகவும் சிறந்தது. கோகுலாஷ்டமி ஒருநாள் முழுவதும், அந்தப் பாலகிருஷ்ணனையே நினைத்து,  ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்று அவனது திருநாமத்தையே நினைவில் கொண்டு அனுஷ்டிக்கும் விரதம் பல்லாயிரம் ஏகாதசி விரதங்கள் அனுஷ்டிப்பதற்குச் சமமாகும்.