தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் மாலை அணிந்து, முருகனின் திருவுருவ படம் தாங்கிய வாகனங்களுடன் பாதயாத்திரையாக திருச்செந்தூரை வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் இன்று அதிகாலை முதலே கடலிலும், புனித நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடி, பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருக பெருமானை தரிசித்து வருகின்றனர். தைப்பொங்கல் தினத்தில் பக்தர்களின் கூட்டத்தை நெறிப்படுத்தவும், சீக்கிரமே தரிசனம் வழங்கவும் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இன்று அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மற்ற காலப் பூஜைகள் மற்றும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
Edited by Siva