1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும் நோக்கமும் என்ன...?

ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

இந்த நடைமுறை கூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான். மற்ற தேதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில், மகாவிஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம்.
 
கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். "எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்" என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி  ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
 
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
 
அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி  வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.