திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

முருகக் கடவுளின் அவதார நாளான வைகாசி விசாகம்...!

முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாளாகும். வைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
புத்த மதத்தில் இந்நாள் புத்தரின் அவதார நாளாகவும், புத்தர் ஞானம் பெற்ற நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நம்மாழ்வார் பிறந்த தினமும்  இந்நாளே ஆகும்.
 
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும்  அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம்  செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.
 
வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம்.
 
இந்த நாளின் போது இந்துக்கள் விரதம் இருந்தும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். முருகன்  மட்டுமில்லாது சிவன், அம்மன் வழிபாட்டையும் மக்கள் மேற்கொள்கின்றனர்.
 
வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.
 
வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி  மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். 
 
வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து  நம்மைக் காப்பாற்றும். 
 
வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை  நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.