வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தெய்வங்களுக்கு உகந்த கிழமைகளும் வழிபாட்டு முறைகளும் !!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில், காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம்.

திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் மேற்கொள்வது நற்பலன்களை வாரி வழங்கும்.
 
செவ்வாயக்கிழமை அங்காரக விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இந்த நாளில் விரதம் இருப்பது, கூடுதல் பலன்களை வழங்கும்! மேலும், சிவாலயங்களில் உள்ள முருகன் சந்நிதிக்குச் சென்றோ அல்லது முருகப்பெருமான் தனியே கோயில் கொண்டிருக்கும் தலத்துக்கோ சென்று கந்தக் கடவுளை வழிபடலாம்.
 
புதன்கிழமை விரதம் அனுஷ்டித்தால் கல்வி, புகழ், ஞானம், தனம் பெருகும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு சிறந்தது. ஸ்ரீநரசிம்மரை பானகப் பிரசாதம் வழங்கி தரிசிக்கலாம்.
 
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். நல்ல குழந்தைகள் பிறக்கும். சகல காரியங்களும் கைகூடும். காலை அல்லது மாலை வேளையில், நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கலாம்.
 
வெள்ளிக்கிழமை சுக்கிர வார விரதம் மேற்கொள்வதற்கான அருமையான நாள். அம்பாளை பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். ஸ்ரீலலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யலாம்! காலையும் மாலையும் சிவாலயத்தில் உள்ள அம்பாளையும் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரையும் வணங்கி வளம் பெறலாம்.
 
சனிக்கிழமை: சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோயிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும். 
 
மேலும், சனிக்கிழமை திருமாலுக்கு உரிய அருமையான நாள். திருப்பதி வேங்கடாசலபதிக்கு உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடலாம். சகல ஐஸ்வரியங்களும் பெறலாம். இவை தவிர, தினமும் காக்கைக்கு அன்னமிடுவது உத்தமம். கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமையில் விரதமிருப்பது அவசியம். முக்கியமாக, முடிந்த போதெல்லாம் மௌன விரதம் மேற்கொள்ளலாம்.