நவராத்திரி ஆறாவது நாள் பூஜை வழிபாட்டு முறைகள் !!
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
நவராத்தியின் ஒன்பது நாட்களும், சக்தியை, துர்கா, பத்ரக்காளி, ஜகதாம்பாள், அன்னபூரணி, சர்வமங்களா, பைரவி, ஜாந்தி, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என அலங்கரித்து வழிபடுறோம்.
இந்த நாளில் சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் சண்டிகாதேவியை வழிபடுதல் சிறப்பு. உடன் 7 வயது சிறுமியை இந்திராணியாக மற்றும் காளிகாவாக நினைத்து பூஜித்தல் வேண்டும். சஷ்டி திதி முடிவதற்குள் கடலை மாவினால் தேவியின் நாமத்தை கோலமிட்டு வழிபடுதல் சிறப்பு.
பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம் போன்ற மலர்களில் ஒன்றால் அம்பாளை பூஜித்தல் சிறப்பு. தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் போன்றவற்றை அம்பாளுக்கு நிவேதனமாகப் படைக்கலாம்.
சங்கீதம் தெரிந்தவர்கள் நீலாம்பரி ராகத்தில் அம்பாளை பாடி வணங்கலாம். இப்படியாக இந்த நாளில் அம்பாளை பூஜிப்பதால் வழக்குகளில் வெற்றி கிடைக்கப்பெறும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.