செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்கள்...!!

திருவண்ணாமலை கிரிவலம் வரும் பாதையில் அஷ்ட லிங்கங்கள் எனப்படும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்கங்களும், மலையைச் சுற்றிலும் 14 கி.மீ சுற்றளவில் மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திர லிங்கம்:
 
கிரிவலம் வரும் பாதையில் முதலில் உள்ளது இந்திர லுங்கமாகும். அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெகு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரனே நேரடியாக இங்கு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டு செல்வதாக ஐதீகம்.
 
அக்னி லிங்கம்:
 
கிரிவலப்பாதையில் தென் கிழக்கு திசையில் அக்னி லிங்கம் அமைந்துள்ளது. சந்திரனுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்த லிங்கமே, குளிர்ந்து அக்னி லிங்கமாக  காட்சியளிக்கிறது.
 
எம லிங்கம்:
 
கிரிவலப்பாதையில் தென் திசையில் மூன்றாவதாக அமைந்துள்ளது எமலிங்கம். தென் திசையின் அதிபதியான எமனுக்கு சிவபெருமான் தாமரை மலரில் லிங்க வடிவில் தோன்றினார். எம லிங்கத்தை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும்.
 
நிருதி லிங்கம்:
 
கிரிவலம் வரும் பாதையில் அடுத்ததாக அமைந்துள்ளது நிருதி லிங்கம். இது தென் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி பகவானுக்கு ஈசன் நிருதீஸ்வரராக தோன்றி காட்சி கொடுத்த இடமாகும்.
 
வருண லிங்கம்:
 
கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். வருண பகவானுக்கு ஈசன் நீர் வடிவில் லிங்கமாக தரிசனம் தந்தருளிய தலமாகும். இந்த லிங்கத்தை வணங்கினால் மேற்கு திசைக்கு அதிபதியான சனி பகவானின் அருளைப் பெறலாம். தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் தலமாகும்.
 
வாயு லிங்கம்:
 
கிரிவலப் பாதையில் அடுத்ததாக வரும் லிங்கம் வாயு லிங்கமாகும். இது வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வாயு பகவானால் உருவாக்கப்பட்டது.
 
குபேர லிங்கம்:
 
கிரிவலப் பாதையில் ஏழாவதாக அமைந்துள்ள லிங்கம் குபேர லிங்கமாகும். வட திசையின் அதிபதியான குபேரன், இந்த இடத்தில் இருந்து அண்ணாமலையாரை தரிசித்து வணங்கிய பிறகு, தான் இழந்த அனைத்து செல்வங்களையும் திரும்பவும் பெற்றார்.
 
ஈசான்ய லிங்கம்:
 
சுமார் 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப் பாதையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கமாகும். நந்தீஸ்வரர் வணங்கிய லிங்கமாகும். எம்பெருமான் ஈசனைத் தவிர அனைத்துமே நிலையற்றது என்பதை உணர்த்தும் ஞான சன்னிதி இதுவாகும்.